வியாழன், 10 அக்டோபர், 2013

இன்று (10.10.2013) உலக கண் பார்வை நாள்! பார்வையிழப்பை தடுக்கும் வழி முறைகள்!.

இன்று (10.10.2013) உலக கண் பார்வை நாள்!
பார்வையிழப்பை தடுக்கும் வழி முறைகள்!.


- அ.போ. இருங்கோவேள்,
மருத்துவ சமூகவியலாளர்,(Medical Sociologist)
மேலாளர் - நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை,
சங்கர நேத்ராலயா, சென்னை 600 006.

உலக சுகாதார நிறுவனம், அக்டோபர் 10, 2013 -ம் தேதியை உலக கண்பார்வை தினமாக அறிவித்துள்ளது.

உலக பார்வை தினம் என்று அறிவிப்பதன் முக்கிய நோக்கம், பொதுமக்கள் மத்தியில் கண் நலம் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்துவதேயாகும். இதனைக் கருத்திற்க்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் கண் மருத்துவர்கள், மருத்துவ சமூகவியலாளர்கள் மற்றும் கண்ணியாலாளர்கள் கண் நலம் பற்றிய செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் 2010 வருட ஆய்வின்படி உலகம் முழுவதிலும் 285 மில்லியன் பேர் கண் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 246 மில்லியன் பேர் 'லோ விஷன்' என்று சொல்லக்கூடிய மிகக்குறைந்த பார்வை என்னும் குறை பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக்கொண்டிருக்கும் தேசம் நமது பாரத தேசம்.

108 கோடி மக்களைக் கொண்ட நமது தேசத்தில் 270 லட்சம் பேர் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக பார்வை தினத்தையொட்டி கண் நலம் பற்றிய சில முக்கியமான செய்திகளையும், பார்வையிழப்பினைத் தடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வோம்.

இந்த கட்டுரையை மூன்று கருதுகோள்(Concept)கள் மூலம் அணுகுவோம்.

1. ஒரு நோயை குணப்படுத்துவதைக் காட்டிலும், அதனை வராமல் தடுப்பது

எளிது.
2. ஒரு நோயை ஆரம்ப நிலையிலே கண்டு பிடித்து குணப்படுத்துவது எளிது.
3. ஒரு நோயை கண்டுபிடித்துவிட்டால், மேலும் முற்றாமல் அந்த

நிலையிலேயே வைத்திருந்து இருக்கின்ற பார்வையை காப்பாற்றிக் கொள்வது. "எண் சாண் உடம்பிற்க்கு - சிரசே பிரதானம்”

அந்த சிரசிலும் பிரதானமாக இருப்பது நமது மூளை. அந்த மூளையின் ஒரு நீட்சியே (Extension) நமது கண்கள். மூளையின் ஒரு பாகம் என்று கூட சொல்லலாம்.

நமது வாழ்வின் நமது செயல்பாட்டில் சுமார் 75 % செயல்கள் நமது கண்களையே சார்ந்து இருக்கிறது.

நமது கண்கள் எவ்வாறு செயல்படுகிறது?

இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்க்கு முன்பு நமது கண்ணின் முக்கியமான பாகங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

* நமது கண்களும் புகைப்படக்கருவி(போட்டோ கேமரா)யும் ஒரே மாதிரியேதான்

செயல்படுகின்றன.நமது கண்ணின் முன் புறம், கண்ணின் முதல் பகுதியாக தெரிவது விழி வெண்படலம் ஆங்கிலத்தில் கார்னியா (Cornea) எனப்படும். இது நிறமேயில்லாத, ஒளி ஊடுருவி செல்லக்கூடிய, இரத்தக் குழாய்கள் ஏதுமேயில்லாத மெல்லிய திசுவாகும். கார்னியாவின் தொடர்ச்சியாக அல்லது

கண்ணிற்க்கு வெளிப்புறச்சுவர் போன்று இருப்பது ஆங்கிலத்தில் ஸ்க்ளீரா (Sclera) எனப்படும் விழி வெளிப்படலம் ஆகும். இந்த ஸ்க்ளீராவின்  மெல்லிய ஜவ்வு போன்ற மேலடுக்கு கஞஜங்க்ட்டிவா (Conjunctiva) எனப்படும் இமையிணைப்பு படலம் ஆகும்.

* சரி, அடுத்து கார்னியாவிற்க்கு அடுத்து இருக்கக்கூடிய பகுதி ஐரிஸ் (Iris) எனப்படும் கருவிழி ஆகும். இதற்கு அடுத்த பகுதியே லென்ஸ் (Lens) எனப்படும் வில்லை என்ற பகுதி ஆகும். இது கிரிஸ்டலின் என்ற புரோட்டினால் ஆன ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய பாகம் ஆகும். ஆக கார்னியாவில் இருந்து இந்த லென்ஸ் வரை உள்ள பகுதி கண் முன் அறை (ஆன்ட்டீரியர் சேம்பர் - Anterior Chamber) எனப்படுகிறது. லென்ஸின் பின் புறம் உள்ள பகுதி கண் பின் அறை (போஸ்ட்டீரியர் சேம்பர் - Posterior Chamber) எனப்படுகிறது.

* லென்ஸின் பின் பகுதியில்  உள்ள வெற்றிடம் விட்ரியஸ் திரவம் என்ற ஜெல் போன்ற திரவத்தினால் நிரம்பியுள்ளது.இந்த பின் அறையின் உட்புறச் சுவர் போன்று இருப்பது  ரெட்டினா - Retina விழித்திரை ஆகும்.

விழித்திரை என்பது நமது கண்ணின் உட்புறச்சுவர் போல அமைந்துள்ள உணர்திறன் அதிகமாக உள்ள திரை போன்ற பகுதியாகும்.நமது விழித்திரையைத் தொடர்ந்து இருப்பது ஆப்டிக் நெர்வ் - Optic Nerve எனப்படும் பார்வை நரம்பு ஆகும்.



சரி நம் கண்கள் ஒரு பொருளை எப்படி பார்க்கிறது?

* நாம் கேமராவால் ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது அவருடைய உருவத்திலிருந்து  ஒளிக்கதிர்களை கேமராவில் உள்ள லென்ஸ் பெற்று, கேமராவின் உள்ளே அனுப்பி  கேமராவில் உள்ள ஃபிலிமில் பிம்பம் பதிவாகிறது.

* அதே போன்று நாம் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அந்த பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நமது கண்களின் முன் புறம் உள்ள கார்னியாவில் குவிந்து,அந்த ஒளிக்கதிர்கள் கார்னியாவையும் லென்ஸையும் ஊடுருவிச் சென்று விழித்திரையில் பிம்பமாக பதிவாகிறது.

* பழைய மாடல் ஃபிலிம் ரோல் பயன்படுத்தும் கேமராக்களில் ஃபிலிமில் பிம்பம் தலைகீழாக பதிவாகும்.

* அதே போன்று நமது கண்ணின் விழித்திரையில் பிம்பம் தலைகீழாக பதிவாகிறது.

* கேமராவில் எடுத்த ஃபோட்டோவை பார்ப்பதற்கு, கேமராவை ஒரு கம்ப்யூட்டரோடு ஒரு கேபிள் மூலம் இணைத்து, அப்போது ஏற்படும் சில வினை மாற்றங்களால் கம்ப்யூட்டரில் நாம் யாரை ஃபோட்டோ எடுத்தோமோ அவரது உருவத்தை பார்க்க முடிகிறது.

* அதே போன்று நமது கண்களில் விழித்திரையில் உருவான பிம்பங்கள் விழித்திரையில் மின்சமிக்ஞைகளாக மாற்றப்பட்டு பார்வை நரம்பு வழியாக நமது மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மூளையில் உள்ள பார்வை மண்டலத்தின் மூலமே நாம் அந்த பொருளை பார்க்க முடிகிறது.







பார்வையிழப்பினை தவிர்க்கும் முறைகள்:

மரபியல் ரீதியான பரம்பரை கண் பார்வை குறைபாடுகள்:

பரம்பரை கண் நோய் பிரச்சினை உள்ள குடும்பத்தினரிடையே, நெருங்கிய உறவினரிடையே திருமண உறவினை தவிர்ப்பதன் மூலம், பிறவிக் கண் குறைபாடுகளான ரெட்டினைட்டிஸ் பிக்மெண்டோசா எனப்படும் மாலைக் கண் நோயினையும், ரெட்டினோப்ளாஸ்டோமா எனப்படும் விழித்திரை புற்று நோயினையும் தவிர்க்க முடியும்.

திருமணத்திற்க்காக காத்திருக்கும் பையனின் வீட்டிலும், பெண்ணின் வீட்டிலும் ஏதேனும் பரம்பரை கண் நோய்கள் இருக்குமேயானால், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அத்தகைய மரபியல் ரீதியான பரம்பரை கண் நோய்களுக்கான வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே நெருங்கிய உறவினரிடையே திருமண உறவினை தவிர்ப்பதன் மூலம் பிறவி மற்றும் பரம்பரை கண் நோய்களால் பார்வையிழந்த ஒரு புதிய தலைமுறை உருவாவதை தவிர்க்க முடியும்.

கருவறையில் கண் நலம்:

* நெருங்கிய உறவினருக்குள் - பரம்பரை கண் நோய் உள்ள குடும்பங்களுக்குள் திருமண உறவை தவிர்த்தால் அதன் மூலம் பரம்பரைக் கண் பார்வைக்குறைபாடுடைய ஒரு புதிய தலைமுறை உருவாவதைத் தடுக்கலாம். மேலும் நம் குழந்தைகள் கருவிழிகளின் செயல்பாட்டை கருவறையிலேயே தொலைத்துவிட்டு பிறவியிலேயே பார்வையற்றவராக பிறக்கும் நிலையை தவிர்க்கலாம்.

* கருவுற்றிருக்கும் தாயின் தினசரி உணவில் பால், முட்டை, பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் தேவையான அளவு இருக்க வேண்டும்.

* மருத்துவர்களின் ஆலோசனையின்றி அடிக்கடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப்பார்ப்பது குழந்தையின் பொது நலத்திற்கும், கண் நலத்திற்கும் நல்லதல்ல.

* கருவுற்றிருக்கும் தாய்மார்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவற்றை பார்ப்பதை தவிர்ப்பதும் நல்லது.

* தகுதியுள்ள மகப்பேறு மருத்துவர் மூலமாகவே பிரசவம் நடைபெற வேண்டும்.

தகுதியற்றவற்றவர்கள் செய்யும் பிரசவத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண் இமைகளை திறக்க முடியாமை (Ptosis) போன்ற பிரச்சினைகள் வரலாம்.


*கருவுற்றிருக்கும் காலத்தில் தாய்க்கு அம்மை அல்லது மஞ்சள் காமாலை  போன்ற நோய் வந்திருந்தால் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

* ஆக இந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தாய்மார்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் மிகக் கவனமாக செயல்பட வேண்டும்.

“முத்துப்போல் குழந்தை பிறக்க வேண்டும் மூன்று கிலோ எடை இருக்க வேண்டும்” என்பார்கள். அது மட்டுமல்ல் “முத்துச்சுடரென ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் விழிகளுடனும் பிறக்க வேண்டும்”.

பிறந்த குழந்தைகளின் கண் நலம்:

* குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தால், குழந்தைக்கு ‘குழந்தைகள் கண் சிகிச்சை நிபுணரின்’ (Pediatric Ophthalmologist) ஆலோசனை மிகவும் அவசியம்.  ஏனெனில் Retinopathy of Prematurity எனப்படும் “வளர்ச்சி குறைந்த/முழு வளர்ச்சியடையாத விழித்திரை நோய்” ஏற்பட வாய்ப்பு உண்டு.  ஆரம்ப நிலையில் இதனை குணப்படுத்த முடியும்.

* குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்கு கண்ணீர் சுரக்காது. மீறி கண்ணீர் வருமேயானால் கண் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

* கை வைத்தியம், பரம்பரை வைத்தியம் என்ற பெயரில் பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னார், கோடி வீட்டு மாமி சொன்னார் என்று தாய்ப்பால், எண்ணெய் போன்றவற்றை குழந்தையின் கண்களில் விடுவது தவறு. இவற்றின் மூலம் கண்களில் நோய்த் தொற்று பரவும் அபாயம் அதிகம்.

* குழந்தை மாறு கண் பிரச்சினையுடன் பிறந்திருந்தால்  “குழந்தை அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறான்(ள்)” என்று ஆனந்தக் கும்மியடிக்க வேண்டாம்.

மாறு கண் அதிர்ஷ்டத்தின் அடையாளமல்ல. அதனை சரி செய்யாவிடில் பின்னாளில் பிரச்சினைகள் வரலாம். அந்தக் குழந்தைக்கு உடனடித் தேவை கண் மருத்துவரின் முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல். கவனிக்காவிட்டால் ஆம்ப்ளியோப்பியா (Amblypia) எனப்படும்  சோம்பேறிக்கண் (Lazy Eye) நோய்க்கு ஆளாகலாம். பாதிக்கப்பட்ட கண் தன் முழு செயல்பாட்டையும் இழக்க நேரிடலாம்.

* குழந்தைகளுக்கு உரிய காலங்களில் போட வேண்டிய தடுப்பூசிகள், சொட்டு மருந்துகள் போட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் கண் தொற்று நோய் உட்பட சில நோய்களின் கடும் விளைவுகளிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படுவதற்க்கும் வாய்ப்பு உண்டு.

* குழந்தைகளுக்கு தட்டம்மை, சின்னம்மை (Measles and Chicken Pox) போன்றவை வந்தால் அவை குணமானவுடன் கண் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. ஏனெனில் கிராமங்களில் “குழந்தை மேலே அம்மா வந்தா.  கண்ணைப் பறிச்சுட்டு போய்ட்டா, தெய்வக் குத்தம் வந்துருச்சு” என்றெல்லாம் பேசுவதை கவனித்திருப்பீர்கள். நோய்த்தொற்றின் காரணமாக கண் பார்வைக்குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். நம் கவனக் குறைவுக்கு கடவுளை குறை சொல்ல வேண்டாம்.

* குழந்தைகளின் கருவிழிகளுக்கு முன்புறம் கார்னியாவில் பூ விழுந்தது ஏதேனும் தோற்றமளித்தால் கண் மருத்துவரின் கவனிப்பு தேவை. அது புரை  (Cataract) அல்லது புற்று நோயாக (Cancer) இருக்கலாம். ஆம் குழந்தைகளுக்கும்கூட கேட்டராக்ட் வருவதுண்டு.

* நம் குழந்தைகளின் கண் பார்வை குறித்து நாமே ஒரு விளையாட்டின் மூலம்
தெரிந்து கொள்ளலாம். குழந்தை நிமிர்ந்து படுத்திருக்கும்போது அதன் தலைக்கு நேராக பல நிறங்கள் கொண்ட ஒரு பந்து அல்லது பலூனை பிடித்துக் கொண்டு சொடுக்கு போட்டு ஓலியெழுப்பலாம். குழந்தை அந்த பலூனைப் பிடிப்பதற்க்காக தனது கைகளையும் கால்களையும் உயர்த்தி உதைக்கலாம். அந்த பலூனை / பந்தினை வலது புறமாகவும், இடது புறமாகவும் தொடர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டே அசைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது குழந்தை தன் கண்களை வலது புறமாகவும் இடது புறமாகவும் அசைக்க வேண்டும்.  அவ்வாறு அசைக்காமல் நிலைகுத்தினாற்போல் பார்த்தால் தொடர்ந்து அந்த விளையாட்டை நடத்த வேண்டும்.  குழந்தையிடமிருந்து முறையான எதிர்நடவடிக்கை ஏதும் இல்லை என்றால் குழந்தைக்குத் தேவை உடனடி கண் மருத்துவ சேவை.

குழந்தைகளின் உணவுப் பழக்கம்:

பொதுவாகவே சத்துள்ள ஆகாரங்கள் நம் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தேவை.

சரியான உணவுப்பழக்கம் கண் நலத்துக்கு மிக மிக அவசியம். இது குழந்தைப் பருவத்திலிருந்தே கவனிக்க வேண்டிய குறிப்பு. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வேறேதுமில்லை. மற்ற உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்:

* வைட்டமின் ஏ : ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும் பிரச்னைக்கும், மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ சத்துக்குறைபாடுதான்.
வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.


* வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல்பாட்டிற்க்கு காரணமாக இருப்பது வைட்டமின் பி.
வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் சி : - நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு வைட்டமின் சி மிகவும் அவசியம்.
வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும்  கண் நலமும்:

நம் குழந்தைகள் பொதுவாக விளையாடும்பொழுது ஏற்படும் விபத்துகளின் காரணமாக  பார்வையிழக்கும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

* குழந்தைகளுக்கு வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் தேர்வில் கவனம் தேவை.
- வில் அம்பு விளையட்டு
- கில்லி தாண்டு
- பட்டம் விடுதல் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுக்களை தக்க
அறிவுரை கூறி தடுப்பது நல்லது.
* மேலும் கூரான பொருள்களான பென்சில், பேனா, கூரான முனையுடைய ஸ்பூன்கள், கத்தி போன்றவற்றை வைத்து விளையாடுவதையும் தக்க அறிவுரை கூறி தடுப்பது அவசியம்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் கண் நலம்:

பார்வை என்னும் புலனும் கற்றல் என்னும் செயற்பாடும் ஒன்றோண்டொன்று மிகுந்த தொடர்புடையது. ஒரு குழந்தையின் கல்விப்பயணத்தில் கண்களின் பங்கு 80% ஆகும்.

எனவே ஒரு குழந்தையின் கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ஆரோக்யமான கண் பார்வை மிகவும் அவசியம் ஆகும்.

கண் பார்வை தொடர்புடைய கற்றல் குறைபாடுகள் -  அறிகுறிகள்

* தலைவலி இருப்பதாகச் சொல்லி கண்களை அடிக்கடி அழுத்தி தடவி விட்டுக் கொள்வது.(Headaches or eye strain)

* எவ்வளவு தூரத்திலிருந்து பொருள்களை பார்த்தாலும் பார்வை கலங்களாக தெரிவதாகவும் பொருட்கள் இரண்டிரண்டாக தெரிவதாகவும் சொல்வது. (Blurred vision or double vision).

* கண்கள் கோணலாக குறுக்குவாட்டில்  இருப்பதும், கண்கள் வெவ்வேறு திசைகளைப் பார்த்து இருப்பது.(Crossed eyes or eyes that appear to move independently of each other. )

* அருகிலிருந்து செய்யக்கூடிய செயல்களை, குறிப்பாக படித்தல், வீட்டுப்பாடம் எழுதுதல் போன்றவற்றை செய்யாமல் இருப்பது.(Dislike or avoidance of reading and close work).

* ஒரு பொருளை பார்த்து கற்கும் போது கவனம் சிதறுவது அல்லது வேறு எங்கோ தூரத்து பொருட்களை பார்ப்பது.(Short attention span during visual tasks).

* ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஒரு கண்ணால் படிப்பது, தொலைக்காட்சியை பார்ப்பது, பொதுவாக பார்ப்பது மற்றும் தலையை சாய்த்து பார்ப்பது.(Turning or tilting the head to use one eye only, or closing or covering one eye)

* புத்தகங்களை முகத்துக்கு அருகே வைத்துக் கொண்டு படிப்பது அல்லது மேஜையில் தலையை வைத்துக் கொண்டு படிப்பது மற்றும் எழுதுவது.(Placing the head very close to the book or desk when reading or writing).

* அதிகமான அளவில் கண்களை இமைப்பது அல்லது கண்களை அழுத்தி (மசாஜ்) விட்டுக் கொள்வது.(Excessive blinking or rubbing the eyes.)

* படித்துக் கொண்டிருக்கும் பொழுது படித்த இடத்தை தவற விட்டு விட்டு மீண்டும் தேடுவது, படிக்கும் வார்த்தைகளை ஆட்காட்டி விரலினால் தொடர்வது. (Losing place while reading, or using a finger as a guide)

* ஒழுங்காக படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வேகம் தடைபட்டது போல மெதுவாக படிப்பது அல்லது படிப்பதில் அக்கறை குறைந்து போவது (Slow reading speed or poor reading comprehension).

* படித்தவற்றை நினைவு படுத்திக்கொள்ள முடியாமல் போவது. (Difficulty remembering what was read).வார்த்தைகளை தவற விடுவது அல்லது மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையை படிப்பது, மற்றும் சில வார்த்தைகளில் குழப்பம் ஏற்படுவது.(Omitting or repeating words, or confusing similar words).

* அடுக்குத் தொடர் போன்று வர்த்தைகள் அல்லது எழுத்துக்கள் அடிக்கடி வரும்
போது குழப்பம் ஏற்படுவது(Persistent reversal of words or letters -after second grade)

* உருவங்களையும் வடிவங்களையும் வரைபடங்களையும் நினைவு படுத்திக் கொள்வதில் சிரமம் (Difficulty remembering, identifying or reproducing shapes).

* கண்களும் கைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிரமம் (Poor eye-hand
coordination) – Eg. Basket Ball/Volley Ball games.

* வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாமல் செயல்படுவது (Evidence of
developmental immaturity)

* நிறங்களை வேறுபடுத்தி காண்பிப்பதில் சிரமம்.(Difficulties to identify
the colours)

எனவே மேற்கண்ட அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்கள் பார்வையிழப்பினை தவிர்த்து, கல்விப்பயணத்தில் சிறப்பாக முன்னேற உதவி செய்ய முடியும்.

பார்வை திறன் குறைபாடு:

இது ஆங்கிலத்தில் Refractive error எனப்படுகிறது.
இதனை தவிர்க்க முடியாது.
குணப்படுத்தவும் முடியாது.
ஆனால் திருத்திக் கொள்ள முடியும்.
இது கிட்டப்பார்வைக்குறைபாடு எனப்படும் myopia, தூரப்பார்வைக்குறைபாடு எனப்படும் hypermetropia ஒருதளப்பார்வை எனப்படும் Astoigmatism, வெள்ளெழுத்து எனப்படும் Presbyopia ஆகிய பிரச்சினைகளின் தொகுப்பு எனலாம்.இவற்றை கண்ணாடி அணிந்தோ, காண்டாக்ட் லென்ஸ் அணிந்தோ அல்லது லேசிக் லேசர் சிகிச்சை மூலமாகவோ திருத்திக் கொள்ளலாம்.

கண் புரை எனப்படும் கேட்டராக்ட்:


இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான பார்வையிழப்புக்குக் காரணம் கண் புரை.கண்புரை என்பது வயோதிகம் காரணமாக நமது கண்ணில் உள்ள லென்ஸின் ஊடுருவும் தன்மை குறைவதேயாகும். கண்புரை விபத்துகளினாலும், நீரிழிவு காரணமாகவும் மேலும் சில காரணங்களாலும் வரலாம். கண் புரை என்பது முற்றிலும் குணப்படுத்தகூடிய குறைபாடே.

மேலும் கண்புரையை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை மட்டுமே கண் புரைக்கான தீர்வு. மேலும் கண் மருத்துவத் துறையில் தற்போது பயன்படுத்தப்படும் முன்னேறிய மிகச்சிறந்த தொழில் நுட்பம் கண் புரையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக உள்ளது.
இதனை தவிர்க்க முடியாது, ஆனால் தாமதப்படுத்தலாம்.
புகை பிடித்தல், மது அருந்துவதை தவிர்த்தால், கண் புரையை தாமதப்படுத்தலாம்.
வெய்யிலில் பணியாற்றுவோர், பயணம் செய்து கொண்டே இருப்பவர்கள் புற ஊதாக்க்கதிரை தடுக்கும் கூலிங் கிளாஸ் அணிந்து கொள்வதால், கண் புரையை தாமதப்படுத்தலாம்.

தொழிற்சாலைகள், கண்களில் விபத்துகள் மூலம் அடிபடுவதை, அதற்கான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து செயல்படுவதன் மூலம் விபத்துகளை தவிர்ப்பதன் மூலமும் இளம் வயது கண் புரையை தாமதப்படுத்தலாம்.



க்ளகோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய்:

இதனை தவிர்க்க முடியாது.
குணப்படுத்தவும் முடியாது.
ஆனால் உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இருக்கின்ற பார்வையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

'க்ளாக்கோமா' என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா' இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது.  "ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா'வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந்திருந்து தாக்கும் கள்வன்' என்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம்.

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா'வுக்கான அறிகுறிகள்.

பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா' பாதிப்பை அறியலாம். நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும்.

பெற்றோர்களுக்கு கிளக்கோமா இருப்பது தெரியுமானால், அவர்களது வாரிசுகளும் முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே கிளக்கோமாவை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே இருக்கின்ற பார்வையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நீரிழிவு விழித்திரை நோய்:
பாரதம் நீரிழிவின் தலைநகரமாக உள்ளது. நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள், வருடம் ஒரு முறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும். மேலும் பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு  இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல்,  வருடம் ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் உட்பட நீரிழிவு சார்ந்த உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க முடியாது.
குணப்படுத்தவும் முடியாது.
தாமதப்படுத்த முடியும்.

ஆனால் உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இருக்கின்ற பார்வையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

தொழிற்சாலை கண் விபத்துக்கள்:

தொழிற்ச்சாலைகளில் பணியாற்றும் போது கண்களில் ஏதேனும் துரும்புகள் விழுந்துவிட்டால். அவற்றை நாமே எடுக்க முயற்சி செய்யக்கூடாது. கண் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாவதற்க்கு வாய்ப்பு உண்டு. ஈரமான துணி ஒன்றினை கண்ணை அழுத்தாதவாறு வைத்து மூடிக்கொண்டு உடனடியாக கண் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அப்போது கண்ணில் விழுந்த பொருளின் மாதிரி இருந்தால் அதனையும் எடுத்thuதுச் செல்ல வேண்டும். கண்ணில் சுற்றுப்பகுதி மரத்துப்போவதற்கு மருந்து போட்டுவிட்டு கண்ணில் விழுந்த பொருளை மிகவும் இலாகவகமாக கண் மருத்துவர் எடுத்துவிடுவார்.

உரிய நேரத்தில் செயல்படுவதன் மூலம், பார்வையை காப்பாற்றிக்கொள்ளவும், பார்வையிழப்பினை தவிர்க்கவும் முடியும்.

கண்களுக்கான முதல் உதவி ஏற்பாடுகள் :

அ) கண்களில் தூசி போன்ற ஏதேனும் விழுந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்க்காக கண்களைக்  கசக்காதீர்கள். கண்களை லேசாக திறந்து மூடினாலே கண்ணீர் பெருக்கெடுத்து அவற்றை தானே  வெளியேற்றிவிடும். உறுத்தல் அதிகமாக இருக்குமேயானால் சுத்தமான தண்ணீரினால் கண்களை சுத்தம் செய்வதன் மூலம் தூசுகளை அகற்றிவிடலாம்.

ஆ) கண்களில் ஏதேனும் ரசாயனப் பொருட்கள் அல்லது ஆசிட் தெறித்துவிட்டால், கண்ணில் சுத்தமான தண்ணீரினால் கண்களின் எரிச்சல் நிற்க்கும் வரை அலம்ப வேண்டும். பின் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

இ) வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்பபடும்.

கண்களுக்கான முதல் உதவி ஏற்பாடுகளை சரி வர செய்வதன் மூலம் பார்வையிழப்பினை தவிர்த்து பார்வையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்:

கணிணியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுபவர்கள் 20 - 20 - 20 ஃபார்முலா வினை  பயன்படுத்தினால் சில பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதாவது கணிணியில் தொடர்ந்து  பணியாற்றும்போது 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 நொடிகள் பார்ப்பதும், அல்லது 20 நொடிகள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்வதும், 20 நொடிகளுக்கு ஒருமுறை  கண்களை இமைப்பதும் மிக உதவியாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி தலைவலி, வாந்தி, குமட்டல் இருக்குமேயானல் உடனடியாக கண் மருத்துவரிடம் முழுமையான கண் பரிசோதனை செய்வதன்மூலம் பர்வையிழப்பைத் தடுத்துக் கொள்ளலாம்.

புற ஊதாக்கதிர்களிடமிருந்து கண்களுக்கான பாதுகாப்பு:

நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் குறிப்பாக பகல் நேரங்களில் வாகனம் ஓட்டுபவராகவும் இருந்தால் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய குளிர் கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது. முக்கியமான விஷயம், ஒரு கண் மருத்துவரிடம் அல்லது கண்ணியலாளரிடம் கண் பரிசோதனை செய்து கொண்டபின் அவர் பரிந்துரைக்கும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது.

கண் தானம் செய்வோம்; காலத்தை வெல்வோம்:

நமது பிறப்பு அர்த்தம் உள்ளது,
வாழ்க்கை அர்த்தம் உள்ளது,
மரணமும் அர்த்தம் உள்ளதாக அமைய வேண்டும்!
- எனவேதான் நமது சாஸ்திரங்களும் அன்னதானம், வஸ்திரதானம், கோ தானம், என்று பல்வேறு வகை தானங்களை வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் கண் தானமும் ஒரு சிறந்த தானமாக பாவிக்கப்படுகின்றது.

கார்னியல் பார்வைக் கோளாறினால் பார்வையை இழந்தவர்கள் நமது நாட்டில் மட்டும் சுமார் 1 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இவர்களில் பலர் குழந்தைகள் மற்றும்  இளைஞர்கள். இவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பு கார்னியா மாற்று ஆபரேஷன். கார்னியா மாற்று ஆபரேஷனுக்கான முக்கியமான தேவை தானமாகக் கிடைக்க வேண்டிய கண்கள். ஒருவர் ஆறு மணி நேரத்திற்க்குள் அவரது கண்களை தானமாக அளிக்கக்கூடிய பட்சத்தில், அந்த கண்களால்  இருவர் மீண்டும் பார்வை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 044 28281919 என்ற தொலைபேசி எண்ணை அல்லது 1919 என்ற நான்கு இலக்க இலவச தொலைபேசி எண்ணை  தொடர்பு கொள்ளலாம்.

கண் நலம் காப்போம், ஒளிபட வாழ்வோம்!.

கட்டுரை ஆசிரியர்:
அ போ இருங்கோவேள்
மருத்துவ சமூகவியலாளர்
மேலாளர் - நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை
சங்கர நேத்ராலயா
சென்னை 600 006
இ மெயில்: irungovel@gmail.com, api@snmail.org


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக